கல்லூரி அதிபரினால் 11-11-2013 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை

ccpg 2013 (39)எமது இன்றைய நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிக்கும் எங்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய உயர் திரு. நந்தகுமார் அவர்களே சிறப்பு விருந்தினர் மருதங்கேணி கோட்டக் கல்விப்பணிப்பாளர் பெருமதிப்பிற்குரிய பொன்னையா அவர்களே ஆசியுரை வழங்கி அமர்ந்துள்ள சிவஸ்ரீ சோ தண்டபாணிக தேசிகர் ஐயா அவர்களே நிறுவுனர் பேருரை வழங்க இருக்கும் எமது பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் திரு. சிவா கிருஷ்ணமுர்த்தி அவர்களே

பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பாடசாலை அபிவிருத்திக்குழு, என்பவற்றின் செயலாளர்களே, உறுப்பினர்களே, இங்கு வருகை தந்திருக்கின்ற சகோதர பாடசாலைகளின் அதிபர்களே, ஆசிரியரிகளே, மற்றும் கல்வி திணைக்களம் சார் உத்தியோகத்தர்களே, பெற்றோர்களே, பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே எமது ஆசிரியர் பெருந்தகைகளே, மாணவச் செல்வங்களே அனைவருக்கும் எனது மாலை வணக்கங்கள். 

இன்றைய நாள் எமது பாடசாலை வரலாற்றில் ஒரு பொன்னான நாள் பெருந்திரளான பெற்றோர்களுக்கும் நலன் விரும்பிகளும் விருந்தினர்களும் வருகை தந்திருக்க எமது மாணவச்செல்வங்களது சாதனைகள் வெளிப்படுத்தப்படுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று எமது பிராந்தியம் கல்விப்புலம் சார்பாக பலத்த சவால்களை எதிர் நோக்கியுள்ள நிலையில் அதிபர்களாகிய நாமும், ஆசிரியர்களும், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் அதி உச்சமான பிரயத்தனங்களை பயன்படுத்தி கல்வி அடைவு மட்டத்தின் உயர்வுக்காகபெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றோம். பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக உருவாக்குவது மட்டுமன்றி கல்வியில் உயர்ந்தவர்களாகவும் ஜனநாயகப் பண்புடன் நாட்டிற்கு நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டிய கடமை கல்விப்புலம் சார்ந்த அனைவரதும் கடமையாகவுள்ளது.

எமது வடமராட்சியின் கல்வியில் மிகுந்த கவனம் எடுத்து சிறப்பாக திட்டமிட்டு உயர்பெறுபேற்றை பெறுவதற்காக இன்று இரவு, பகல் பாராது ஓயாமல் தன் பணியினை ஆற்றிவரும் எங்கள் கல்வியின் கண்ணாக விளங்கும் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. நந்தகுமார் ஐயா அவர்கள், இன்றைய விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியினைத்தருகின்றது 'எண்ணித் துணிக கருமம் - துணிந்த பின் எண்ணுவதென்பது இழுக்கு'இதற்கேற்ப சிறந்த கல்வித்திட்டமிடல் பணிகளை வகுத்து அமுலாக்கியதன் மூலம் எமது வடமராட்சியின் கல்வியை மேம்படுத்திய பெருமைக்குரியவராக இன்று கல்விப்ணிப்பாளர் என்ற உயர்நிலைக்கு எமது வலயக்கல்விப்பணிப்பாளர் உயர்ந்துள்ளார்.

'கடமையைச் செய் பலனை எதிர் பாராதே' என்ற உபதேசத்திற்கு ஏற்ப எங்கள் கல்விப்பணிப்பாளர் எமது பிரதேசக்கல்விக்கு புதிய புதிய வியுகங்களை வகுத்து உயர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார். அதற்கு சான்று பகர்வதற்காக இவ்வாண்டின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் சித்தி வீதங்கள் விடை பகர்கின்றன இது போலவே வடமராட்சியின் உயர்தர, சாதாரண தர பரீட்சை முடிவுகளும் நிச்சயமாக உயர்வாகவே அமையும். இதற்கெல்லாம் எமது பிள்ளைகளின் கல்வியே தனது மூச்சு என அரும்பாடுபட்டு உழைத்து வரும் எமது வலையக்கல்விப்பணிப்பாளர் என்றால் மிகையாகாது. இந்த வேளையில் எங்களது பெற்றோர்களும் தங்கள் பார்வையை பிள்ளைகளின் கல்வியின் பக்கம் திருப்புவார்களாயின் கல்வியில் பெரும் புரட்சியினை எமது வடமராட்சி வலயம் ஏற்படுத்தி விடும்.

மிகப் பயங்கரமான உலகமயமாக்கல் நோய்களில் இருந்தும் எமது மாணவச் செல்வங்களை காப்பாற்றி கல்வி என்ற புனிதமான பயணத்திற்கு அழைத்துச் செல்வதில்அதிபர்களாகிய நாமும் ஆசிரியப் பெருந்தகைகளும் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். அதே வேளை அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து எங்கள் பிள்ளைகளின் ஒழுக்கத்திற்கும் கல்விக்குமாக பாடுபடும் ஆசிரிய தெய்வங்களை, பெற்றோர்களும், பிள்ளைகளும் என்றும் மதிக்கவேண்டும்.எமது கல்வித்தாயின் வளர்ச்சிப் பாதையில் பலதடைகளும், தழும்புகளும் கடந்த 30 வருடங்களாக ஏற்பட்டிருந்தன. மீண்டும் மிடுக்குடன் எமது கல்லூரி இன்று சகல வளங்களுடனும் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்கு எமது வலயக் கல்விப்பணிப்பாளரது துணிச்சலான சில முடிவெடுத்தற் திறன்களும் காரணமாக இருந்துள்ளன. இந்த துணிச்சலுடன் எமது பழைய மாணவர்களதும், சிதம்பரக்கல்லூரி நலன்புரி வலையமைப்பினரதும் நிதிப்பாயச்சல்களும் பேருதவி புரிந்துள்ளன.

பௌதீகவள நிலை

எமது பாடசாலையின் உயர்தர வகுப்புக்களுக்கான இரசாயன ஆய்வு கூடம், பௌதீகவியல் ஆய்வு கூடம், உயிரியல் ஆய்வு கூடம் என்பன யுத்த சூழலால் அழிந்திருந்தன. அவற்றை புனரமைப்பதற்கு சிதம்பரக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பின் இலண்டன் கிளையினர் முன் வந்தனர். ஆனால் எந்த ஒரு வேலைத்திட்டங்களையும் கடந்த காலங்களில் மேல் நிலை அதிகாரியின் அனுமதி பெற்றே செய்ய வேண்டிய ஒரு நிலை இருந்தது. ஆனால் எமது வலயக்கல்விப் பணிப்பாளர் மேற்படி ஆய்வு கூடங்களை மட்டுமன்றி, மாணவர் மலசலகூடங்களையும் திருத்தியமைப்பதற்குரிய அனுமதியினை மிகத்துணிச்சலுடன் எமக்குப் பெற்றுத்தந்தார்.இன்று இந்தப்பகுதிகள் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சி அளிக்கின்றன.இது மட்டுமன்றி நாங்கள் இன்று அமர்ந்திருக்கும் கல்லூரியின் இந்தக் கலையரங்கினை புனரமைப்பதற்கு CWN  நேரடியாகவே எமது வலயக் கல்விப்பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு அனுமதியினைக் கேட்டுள்ளது. சுமார் இரண்டு மில்லியன் ரூபா பணத்தினைப் பயன்படுத்தி இந்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு எமது வலயக்கல்விப்பணிப்பாளர் அனுமதி தந்துள்ளார்.

பௌதீகவளத்தேவைகளுள் எமக்கு வகுப்பறைகள் பற்றாக்குறை இருக்கின்றது. இது தொடர்பாக தொடர்பு கொண்டேன். எமது நூலகத்தின் மேற்றளத்தில் மூன்று வகுப்பறைகள் அமைத்து தருவதற்கு எமது வலயக்கல்விப்பணிப்பாளர் உத்தரவு வழங்கியுள்ளார். மிக முக்கியமாக எமது பாடசாலையின் சகல தேவைகளுக்குமான நீர் வசதியை வழங்கக்கூடிய நீர்த்தாங்கி இல்லை அது தொடர்பாகஎமது பணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயமாக அந்த தேவைகளை எமது கல்விப்பணிப்பாளர் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

மனிதவள நிலை

பொருத்தமான ஆசிரியர் வளங்கள் இந்த வருடம் பூரணமாகக் கிடைத்துள்ளது. சித்திர ஆசிரியர் ஒருவரும் நூலகர் ஒருவரும் எமக்கு தேவையாக உள்ளது.

கல்விப்பிரிவும் பெறுபேறும்

2011ல் எமது பாடசாலையில் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகள் இல்லாமல் போய்விட்டன. 2011ல் எமது பழையமாணவர் சங்கத்தினாலும் வலயக்கல்விப்பணிப்பாளரதும் பெரும் முயற்சியினால் இன்று உயர்தரத்தில் கணித விஞ்ஞானப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு எமது பாடசாலை 1AB என்ற தரத்தினை தக்கவைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

2012ல் க.பொ.த உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களில் 10 பேர் சித்தி அடைந்துள்ளனர். 04 பேர் இம்முறை பல்கலைகழகத்திற்கு அனுமதி பெறதகுதி பெற்றுள்ளனர். இதுபோலவே க.பொ.த சாதரண தரத்திலும் தோற்றியவர்களில் 50ம% ஆனோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். சிறப்பு என்னவென்றால் இதில் பெரும்பான்மையான மாணவர்கள் உயர்தர கணித விஞ்ஞான கற்கைகளிற்கு இணைந்தமை ஒரு பெரும் திருப்பம் என்று தான் கூறவேண்டும்.

இணைபாடவிதான செயற்பாடுகளில் விளையாட்டுத்துறையில் கிரிக்கற் உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டம் என்பவற்றில் வலய மட்டத்தில் ஆர்வத்துடன் பங்கு பற்றி எமது மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். சாரணர் செயற்பாடுகளிலும் இவ்வாண்டு 1ம் இடத்தைப்பெற்றுள்ளமை பாராட்டத்திற்குரியது.

சிறப்பு விருந்தினர் பக்கம் எனது பார்வையை திருப்புகின்றேன். எப்போழுதுமே புன்னகை முகத்தோடு எந்தப்பிரச்சினையையும் தீர்த்து வெற்றி கொள்ளும் திறன் கொண்ட எங்கள் மதிப்பிற்குரிய கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு பொன்னையா அவர்களை எவரும் மறக்க முடியாது. இன்று எமது பிரதேசத்தின் கல்வியில் ஒரு துணையாக நின்று வலயத்திற்கும் கோட்டத்திற்கும் அயராது உழைத்து வரும் சிறந்த கல்விப்பணிப்பாளர் மற்றவர்களை ஊக்குவித்து அவர்களை உயர்வடையச்செய்யும் அற்புதமான மனம் படைத்தவர். எனது ஆசிரியர் தொழில் வரலாற்றிலும் அதிபர் பணியிலும் இருந்த கால படிப்படியான உயர்விலும் அவரது வழிகாட்டல்கள் என்றென்றும் மறக்கமுடியாதவை. அவர் பணி சிறக்க வேண்டும் என்றும் எங்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் வருங்காலங்களில் மென்மேலும் உயர்நிலையை அடைய வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்.

என் அன்பார்ந்த ஆசிரியப்பெருந்தகைகளே எமது மாணவச்செல்வங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எண்ணற்றவை. அதில் முக்கியமானது வறுமை. அவர்கள் உங்களிடம் நிறைந்த அளவு உதவி வேண்டியிருக்கிறார்கள். புனிதமான அற்புதமான இந்த தொழில் யாருக்குமே கிடைக்கமுடியாது. ஆசிரியர்கள் அனைவர்களும் நடமாடும் தெய்வங்கள். ஆகவே எமது மாணவச்செல்வங்கள் உங்களது செல்வங்கள் அவர்களை அரவணைத்து வழிப்படுத்தி உயர்த்துவது உங்கள் எல்லோரதும் கடமை. 24 மணி நேரம் உழையுங்கள். நிச்சயம் நீங்கள் உயர்வீர்கள்.

அன்பார்ந்த பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் எங்கள் சொத்துக்கள். எங்கள் பிள்ளைகள் இன்று மிகப்பெரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளார்கள். அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து கல்விக்குள் அவர்களை கொண்டு வரவேண்டும். எமக்கு நீங்கள் செய்யவேண்டிய சிறிய உதவி ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்புங்கள். பாடசாலைக்கும் கல்வி நிலையங்களுக்கும் அவர்கள் செல்வதை உறுதிப்புடுத்துங்கள். கற்று வருவதனை ஒருமுறை நீங்கள் பார்வையிடுங்கள். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவினையும அவதானியுங்கள். பிள்ளைகளிடம் வேண்டத்தகாத எவையும் சேராத அளவிற்கு நீங்கள் கண்காணியங்கள். அவன் நிச்சயம் இமாலய சாதனையாளராக மாறுவான். ஊங்கள் பெயரை காப்பாற்றுவான்.

அன்பு மாணவச்செல்வங்களே இங்கு கூறப்பட்டவை இங்கு நடப்பவை அத்தனையும் உங்களுக்காகவே. கல்விக்கு கரையே கிடையாது. மெல்லக் கற்கவும் கூடாது. விவேகமும் வேகமும் ஒன்று சேரக் கல்வியை தொடங்குங்கள். நிச்சயம் நீங்கள் வீட்டிற்கும் இந்த நாட்டிற்கும் பொருத்தமான விருப்பமான பிரஜையாக இருப்பீர்கள். கல்வியே கண்ணாக கொண்டு படியுங்கள் உழையுங்கள். வலயக் கல்விப்பணிப்பாளரைப் பாருங்கள். அவரது உயர்வுக்கு முழுமையாக காரணம் கல்விதான். எனவே நீங்கள் கல்வியென்ற பெருமரத்தை இறுக்கப்பிடித்து உயரவேண்டும். என்பதே எனது விருப்பமாகும். கல்விக்காக பாடுபடுங்கள் கல்வியை தொடுங்கள். சிறந்த மனித வளமாக உங்களை மாற்றுங்கள். இந்த இடத்தில் ஆட்சியாளராக நீங்களே நாளை வருவீர்கள் என்று வாழ்த்திவிடை பெறுகிறேன்.

நன்றி. வணக்கம்.

அதிபர்
யா / சிதம்பராக்கல்லூரி
வல்வெட்டித்துறை
11.11.2013