HISTORY

தோற்றமும் வளர்ச்சியும்

ஈழத்தின் வரலாற்றுப்பெருமை மிக்கது வல்வை மாநகரமாகும். இம் மாநகரத்திலே பல பெருமைகள் கொண்ட வல்வையின்கண் தலைசிறந்த கல்விப்பீடமாக விளங்கி இற்றைக்கு ஒரு நூற்றாண்டு கடந்து வெற்றிநடைபோடுகின்றது எங்கள் சிதம்பராக்கல்லூரி.

இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பலர் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி இருக்கின்றனர். அவர்களை இவ்விடத்தில் நினைவு கூர்வதோடு பாடசாலையின் தோற்றம், வளர்ச்சி பற்றி அழகாக நோக்குவோம். எமது கல்லூரியை இற்றைக்கு நூற்றிப்பதின்னான்கு வருடங்களுக்கு முன் ஸ்தாபித்த வள்ளல் பெருந்தகை கு.சிதம்பரப்பிள்ளை என்பவர் ஆவார். இவரைப்பற்றி இங்கு குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.திரு.கு.சிதம்பரப்பிள்ளை

இவர் 1861 ஆம் வருடம் பிறந்தார். இலக்கண, இலக்கியங்களை கற்றுத்தேறியதோடு, ஆங்கிலம் கற்று அரச சேவையில் சேர்ந்து பணியாற்றினார். இவர் மாணவராக இருந்த காலத்தில் வல்வெட்டித்துறையில் ஆங்கிலக்கல்லூரி இல்லாத காரணத்தினால் ஐந்து மைல்களுக்கு அப்பால் பருத்தித்துறையிலுள்ள 'உவெஸ்ஸியன் மிஷன்' மத்திய பாடசாலை என்ற பெயரைக் கொண்டிருந்த ஹாட்லிக் கல்லூரியில் கற்று வந்தார். அக்கால கட்டத்தில் வசதி வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால் மிகுந்த கஷ்டப்பட்டு கல்வி கற்றுத் தேறினார். அக்காலத்தில் தான் ஆங்கிலக் கல்வியை கற்றது போல எம்மவரும் கற்க வேண்டும் எனப் பலவாறு சிந்தித்தார். இவை யாவற்றையும் கருத்திற் கொண்டு வல்வையிலுள்ள பெற்றோர்கள் யாவரையும் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு அழைத்து அக்கூட்டத்திலே ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவத்தினையும், சிறப்பையும் எடுத்துக்கூறி எமது சிறார்களும் உலகுடன் உறவாட உதவும் மொழியான ஆங்கிலக்கல்வியை எமது மாநகரிலே கற்பிக்க கல்லூரி ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாகவும் அதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் கோர, மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கவே கல்லூரி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் காரணமாக சிறந்த நந்நாள் ஆகிய 1896 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி வல்வை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள 'ஆலடியில்' சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயருடன் இயங்க ஆரம்பித்தது. இவ்வேளை ஆரம்பப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி சிறிது காலத்திற்குப் பின்னர் 1903 ஆம் வருடம் இறைவனடி சேர்ந்தார்.

ஆரம்பத்தில் சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயரோடு முதன்நிலைக் கல்லூரியாக இருந்த சிதம்பரா ஒரு வருடத்தின் பின்னர் கல்வித் திணைக்களத்தினால் நன்கொடை வழங்கும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. ஆலடியில் இயங்கி வந்த பாடசாலைக்கு மாணவர் தொகை அதிகரிப்பினால் இடவசதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலடியில் இயங்கி வந்த இப்பாடசாலை 1912 ஆம் வருடம் ஊரிக்காட்டில் தற்போதைய நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலேயே நடைபெற்று வந்த இப்பாடசாலை 1923 ஆம் ஆண்டு இரண்டாம் தரக்கனிஷ்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டதுடன் 1928 ஆம் வருடம் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு லண்டன் 'மற்றிக்குலேஷன்' பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு ஏதுவாக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் ஹாட்லிக் கல்லூரிக்கு அடுத்தபடியாக எமது பாடசாலை தரம் D யைப் பெற்றமையும் இங்கு குறிப்பிட வேண்டும். லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சை வகுப்புக்களைத் தொடர்ந்து சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகுப்புக்கள் 1942 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டன.

சர்வகலாசாலைப் புகுமுக வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு போதுமான வசதிகள் 1935 ஆம் வருடமே இருந்தபோதிலும் கூட 1958 ஆம் வருடத்தில் தான் இந்த வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. எமது பாடசாலையின் வேலைத்திட்டங்களையும், சாதனைகளையும், நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானித்த கல்வித் திணைக்களம் எமது கல்லூரியை தரம் II என 1958 ஆம் ஆண்டு தை மாதம் தரமுயர்த்தியது. அத்தோடு மறுவருடமே தரம்ஐ பாடசாலையாக தரமுயர்த்தி மதிப்பளித்து பாராட்டியது மட்டுமன்றி சிதம்பரக்கல்லூரி என்ற பெயரைப் பெற்று இன்று வரையும் அப்பெயரோடும் பெருமையோடும் வாழுகின்றது.

1896 ஆம் வருடம் இக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட சமயம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பருத்தித்துறையைச் சேர்ந்த திரு.விநாயகம் முதலியாரும்அவரைத் தொடர்ந்து திரு.ஏ.நாகமுத்து, திரு.வீ.அருணாசலம் அவர்கள் முகாமையாளர்களாக இருந்து கல்லூரியை வழிநடத்தி வந்துள்ளனர். 1901 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 60 ஆண்டுகளாக பாடசாலையின் முகாமையாளராக திரு.ஞா. தையல்பாகர் அவர்கள் பணியாற்றி இருந்தார். அவரின் பணி என்றால் மிகையாகாது.

Thaiyalpakar

இவரின் காலத்தில் பாடசாலையில் பல்வேறு வேலைகள் இடம்பெற்றதுடன் தேசிய ரீதியிலும், மாவட்டரீதியிலும் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு 1959 ஆம் ஆண்டு பாடசாலை அபிவிருத்தி நிதிக்காக களியாட்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அதனால் கிடைத்த நிதியைக் கொண்டு கல்லூரிக்குத் தென்புறமாகவுள்ள ஐந்தரைப் பரப்பு காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. 1960 ற்குப் பின்னால் இவரின் காலத்திலேயே பாடசாலை அரசுடமை ஆக்கப்பட்டது.

எமது கல்லூரியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் ஏற்பட்ட யுத்தசூழ்நிலைகளால் 1985 ஆம் ஆண்டு வேறொரு பாடசாலையிலும் 1987 ஆம் ஆண்டு இன்னொரு பாடசாலையிலும் தனியார் கல்வி மன்றத்திலும் அப்போதைய அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் கல்லூரியை இயங்க வைப்பதற்கு எடுத்த முயற்சி மிகையாகாது.

1975 ஆம்ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களின் முயற்சியினாலும், ப.மா.ச, பா.அ.சங்கம் இவர்களது துணையினாலும் பாடசாலையில் முறைசாராக்கல்வி ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு தொழிற்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. எமது கல்லூரி நூற்றாண்டு விழா தாண்டி வீரநடை போடும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது பாடசாலையில் கல்வி பயின்ற வைத்தியகலாநிதிகள், நிபுணர்கள், பொறியியலாளர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், அதிபர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலவாறாகப் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் அடைந்து தாய் நாட்டிற்கும், வல்வை நகருக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர். எமது பாடசாலை வளங்கள் பெரும்பாலானவை வல்வையர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது கல்லூரி மாணவர்கள் கல்வியில் மாத்திரமன்றி விளையாட்டுத்துறை, சாரணீயம், நாடகம், சங்கீதம், பொருட்காட்சி, சாகசங்கள் போன்ற பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்து எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்.சாரணீயம்

பெரியார் பேடன் பவல் பிரபு அவர்களால் 1907ம் வருடம் 120 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட சாரணீயம், இலங்கையில் 1912ம் வருடமும் யாழ்மாவட்டத்தில் 1916ம் வருடம் 5 துருப்புக்களுடன் (Troops) 120 பேருடனும் ஆரம்பிக்கப்பட்டது. எமது கல்லூரியில் 1942ம் வருடம் 13 இளஞ்சிறார்களுடன் தொடக்கி வைக்கப்பட்டது.


கல்லூரியில் சாரணீயத்தை ஆரம்பித்து அதனை ஒரு உன்னத நிலைக்குக் கொண்டு வந்த பெருமை எமது கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியருமான திரு.எஸ்.ஆர்.அரியரத்தினம் அவர்களையே சாரும். அன்னார் 1942ம் வருடம் சாரணீயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 1967ம் வருடம் வரை எமது கல்லூரிச்சாரணர்கள் பங்குபற்றிய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு சாரணர்களது முன்னேற்றத்துக்கும், பெற்ற வெற்றிகளுக்கும் உறுதுணையாக இருந்துள்ளார். அன்னார் வவுனியா மாவட்டத்திற்கு இடம்மாற்றம் பெற்றுச் சென்று அம்மாவட்டத்தின் சாரண ஆணையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டது நாம் பெருமை கொள்ள வேண்டியதொன்றாகும். திரு.எஸ்.ஆர்.அரியரத்தினம் அவர்களின் நல்லெண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சாரணீயம் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து யாழ் குடாநாட்டில் மட்டுமன்றி இலங்கையிலேயே முன்னணியில் நின்றதும் நாம் பெருமைப்படக்கூடியதாகும்.


திரு.எஸ்.ஆர்.அரியரத்தினம் அவர்களைத் தொடர்ந்து கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியருமான திரு.வி.இரத்தினசிங்கம் அவர்கள் சாரணர் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றார். சிரேஷ்ட பிரிவிற்கு எமது கல்லூரியின் பழைய மாணவரும், முன்னாள் அதிபருமான திரு. கோ.செல்வவிநாயகம் அவர்கள் இப்பொறுப்பினை ஏற்றுக் கல்லூரிக்கு மேலும் பல பெருமைகளைச் சேர்த்தார். இவர் அகில இலங்கை சாரணீயபயிற்சிக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராகவும், 1980ம் வருடம் யாழ் மாவட்ட சாரண உதவி ஆணையாளராகவும், இதன் பின்னர் யாழ் மாவட்டம் நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் பருத்தித்துறை மாவட்ட ஆணையாளராகவும் பொறுப்பேற்றார். கல்லூரிச் சாரணர் குழு பெற்ற வெற்றிகளுக்கு சாரணாசிரியர்களான திருவாளர். கோ.குழந்தைவேல், எஸ்.சரவணபவானந்தன், நா.சுவாமிநாதன், சு.சாந்தமூர்த்தி, ஏ.சுந்தரம்பிள்ளை, கு.அப்பாத்துரை, கோ.சற்குணபாலன், சு.பழனிவடிவேல், ஆகியோரும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கல்லூரிச் சாரணர் குழு பல சமூக சேவைகளிலும் பொதுநலத் தொண்டிலும் காலத்திற்குக் காலம் ஈடுபட்டு ஆற்றிய சேவைகள் உரிய அதிகாரிகளினால் பாராட்டப்பட்டதை யாவரும் அறிவர். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

1) தொண்டமானாறு செல்வச்சந்நிதி வருடாந்த உற்சவ காலங்களின் போது அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்டி பக்தர்களுக்கும், ஆலய நிர்வாகத்திற்கும் உதவியமை.

2)கல்லூரியில் புதிதாகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்ட போதும், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்களிலும், கல்லூரிப் பொருட்காட்சிகள் நடைபெற்ற தினங்களிலும் பல சிரமதானப்பணிகளை மேற்கொண்டமை.

3)நீரூரியல் ஆராய்ச்சிக் கழகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஒவ்வொரு தவணையிலும் நீர் படுகைகளில் அவர்களின் ஆராய்ச்சிக்கான தளத்தை அமைத்துக் கொடுத்தமை.

4) சுகாதார வாரங்கள் நடைபெறும் காலங்களின் போது பருத்தித்துறை சுகாதார வைத்திய உத்தியோகத்தரின் வேண்டுகோளை ஏற்று சுகாதார விழாவினை திறம்பட நடத்துவதற்கு உதவிபுரிந்தமை.

5) வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையைச் சுத்தப்படுத்தியும், வல்வை மகளிர் கல்லூரியைப் புதிதாக அமைத்த போது கல்லூரிக் கட்டிடங்கள் அமைக்கப்பட இருந்த காணியைத் துப்பரவு செய்தும் கொடுத்தமை.

6) கௌரவ முன்னாள் பிரதமர் திரு.டட்லி சேனநாயக்கா அவர்களின் வருகையின் போதும், கௌரவ முன்னாள் உள்ளுராட்சி அமைச்சர் திரு.ஆர்.பிறேமதாசா அவர்களின் வல்வெட்டித்துறை வருகையின் போதும், இந்திய ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களின் பலாலி வருகையின் போதும், மாட்சிமை தங்கிய மகா தேசாதிபதி திரு.வில்லியம் கோபல்லாவ அவர்களின் பலாலி வருகையின் போதும் மரியாதை அணிவகுப்பை நடாத்திச் சிறப்பித்தமை.

7) 1958ம் வருடம் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது பிற மாவட்டங்களில் இருந்த அகதிகள் கப்பல் மூலம் பருத்தித்துறை துறைமுகத்துக்கு வந்திறங்கியபோது வேண்டிய உதவிகள் புரிந்தமை.

8) கைதடியிலுள்ள நவீல்ட் பாடசாலையில் பாசறை அமைத்து அப்பகுதியில் வீதி ஒழுங்குகளை மேற்கொண்டும், காயமுற்ற பொதுமக்களுக்கு அரசினர் பொது மருத்துவமனையில் உடனுதவும் பணியில் ஈடுபட்டும் ஏழுநாட்கள் வரை தொடர்ந்து உதவியமை.

9) 1958 ம் வருடம் யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற சீனகலைக் கண்காட்சியின் போது பொருட்காட்சியினைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த கல்வியமைச்சின் உதவிச் செயலாளரை கௌரவிக்கும் முகமாக அணிவகுப்பு மரியாதையை நடத்தியமை.

10) கோப்பாய்ப்பகுதிச் சாரணர்களுக்கான பயிற்சிப் பாசறை ஒன்றை எமது கல்லூரியில் அமைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்து கொடுத்தமை.

11) 1992,1993ம் வருடங்களில் மாவட்ட அணித்தலைவர் பாசறையை எமது கல்லூரியில் நடாத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தமை.

12) சாரணத்தலைவர்களுக்கான பயிற்சி நெறிகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் வேண்டிய உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கியமை.

மேற்படி சம்பவங்கள் யாவும் எமது சாரணர்கள் காட்டிய திறமையாகும். கொடுக்கப்பட்ட கடமைகளைக் கச்சிதமாகவும், திறம்படவும் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் என்று சொன்னால் மிகையாகாது.

கல்லூரிச் சாரணர்குழு மேலே குறிப்பிட்ட கடமைகளைப் புரிந்ததோடு மட்டும் நில்லாது யாழ் மாவட்டத்திலும், அகில இலங்கை ரீதியிலும் பல போட்டிகளிலும் விழாக்களிலும் பங்குபற்றி பல சாதனைகளைப் புரிந்ததுடன் வெற்றிகளையும் ஈட்டியது. நடைபெற்ற போட்டிகளின்போது ஒவ்வொரு தடவையும் வழமையான உயர்தரத்தை நிலைநிறுத்தியதுடன் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது. இவர்கள் ஈட்டிய வெற்றிகள், சாதனைகள் சில.

1) யாழ். பழைய பூங்காவில் 1957ம் வருடம் நடைபெற்ற வருடாந்தப் போட்டியில் முதன்முதலாகக் கலந்து கொண்டு பெரும்பாலான பார்வையாளர்கள், இதர சாரணர்கள், சாரணாசிரியர் ஆகியோரது பாராட்டைப்பெற்றது.

2) 1960,1961,1962,1965 ம் வருடங்களில் யாழ். பழைய பூங்காவில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி சிதம்பரா சாரணர்கள் யாழ்மாவட்டத்தில் சிறந்த சாரணர் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'ரோட்டரிக் கேடயத்தைப்' பெற்றுக்கொண்டது. 1952ம் வருடம் சாரணர்களுக்கான போட்டிகள் யாழ்மாவட்டத்தில் தொடங்கப்பெற்று 1965ம் வருடம் வரை நடைபெற்ற 14 போட்டிகளில் நான்கு போட்டிகளில் சிறந்த சாரணர் குழுவாக சிதம்பரா சாரணர்குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

3) 1962ம் வருடம் அகில இலங்கை ரீதியாக நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றும் தரத்தை எமது சாரணர்குழு பெற்றது.

4) 1963ம் வருடம் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி 'லோறன்ஸ் பெர்னாண்டோ' கொடியினை யாழ் இந்துக்கல்லூரி பெற்றுக் கொள்ள விசேட பாராட்டு (Honourable mention) என்ற ஸ்தானத்தை சிதம்பராக்குழு பெற்றுக் கொண்டது.

5) 1965, 1968,1970 ஆகிய வருடங்களில் அகில இலங்கையிலுமே ஆகக்கூடிய இராணிச்சாரணர்களை உருவாக்கி அதற்கான கொடியினைப்பெற்றுக் கொண்ட பெருமையும் சிதம்பரா சாரணர் குழுவுக்கு உண்டு.

6) 1968,1969,1970 ஆகிய வருடங்களில் தொடர்ச்சியாக அகில இலங்கையிலுமே சிறந்த சாரணர்குழு என்ற ஸ்தானத்தைப் பெற்றதுடன், 'சேர் அன்று கொல்டிக்கொற்' வெற்றிக் கிண்ணத்தையும் மேன்மை தங்கிய மகாதேசாதிபதி திரு.வில்லியம் கோபல்லாவ அவர்களிடமிருந்து இராணி மாளிகையில் பெற்றுக் கொண்டது.

7) 1969ம் வருடம் யாழ் மாவட்டத்தில் மீண்டும் சிறந்த குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 'ரோட்டரிக் கேடயத்தைப்' பெற்றுக்கொண்டது.

8) 1970 ம் வருடம் 'பீற்று' (நுவரெலியா) பாசறையில் நடைபெற்ற 'தருசின்னப்' பயிற்சியில் சிதம்பராக்குழு சாராணாசிரியர் திரு.வி.இரத்தினசிங்கமும், சிரேஷ்ட சாராணாசிரியர் திரு.கு.அப்பாத்துரையும் சித்தியடைந்து 'தருசின்ன' விருதைப் பெற்றனர்.

9) 1970ம் வருடம் தொடக்கம் 1980ம் வருடம் வரை யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற சாரணர் விழாவில் பங்குகொண்டு 1973ம் வருடம் தவிர்ந்த ஏனைய வருடங்களில் தொடர்ச்சியாக இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது. 1976 ம் வருடம் நடைபெற்ற விழாவில் சாரண பிரதம ஆணையாளர் திரு.ஹேமபாலா ரத்னசூரியா அவர்கள் பங்குகொண்டு சிறப்பித்தார்கள்.

10) 1976ம் வருடம் தொண்டமானாறு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற உபமாவட்ட விழாவில் பங்குபற்றி தனி ஒரு போட்டியான பாசறைப் பரிசோதனையில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

11) பலவருடங்களின் பின்னர் 1980ம் வருடம் மீரிகமவில் தமிழ்மொழியில் நடாத்தப்பட்ட 'தருசின்னப்' பயிற்சியில் எமது கல்லூரியிலிருந்து திரு.கோ.குழந்தைவேல், திரு.மு.இரவீந்திரன், திரு.எஸ்.வேலாயுதபிள்ளை, திரு.சி.சிவகுமார், திரு.நா.காந்தரூபன், திரு.இ.அருணாசலம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இப்பயிற்சி நெறியின் தலைவராக கல்லூரி அதிபரும், தலைமைப் பயிற்றுனருமான திரு.கோ.செல்வவிநாயகம் அவர்கள் கடமையாற்றினார்கள். இவர்களில் திரு.மு.இரவீந்திரன் அவர்கள் 'தருசின்ன' விருதைப்பெற்றுக்கொண்டார். இவர்களில் திரு.கோ.குழந்தைவேல் அவர்கள் மாவட்ட உதவி ஆணையாளராகவும்(நிர்வாகம்), திரு.மு.இரவீந்திரன் அவர்கள் மாவட்ட உதவி ஆணையாளராகவும்(சாரணர் பிரிவு) நியமனம் பெற்றார்கள்.

12) 1983ம் வருடம் நடைபெற்ற அகில இலங்கை சாரணர் ஜம்போறியில் எமது சாரணர் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதனையொட்டி எமது சாரணர் குழுவினருடனும் கல்லூரி அதிபரும், மாவட்ட ஆணையாளருமான திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களுடனும் இலங்கை வானொலி சார்பில் பேட்டி கண்டு அதனை வானொலி மூலமாக ஒலிபரப்பியதும் குறிப்பிடத்தக்கது.

13) 1991,1992ம் வருடங்களில் பருத்தித்துறை மாவட்ட வருடாந்த சாரணர் விழாக்களில் பங்குபற்றி பாசறைத்தரப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

14) 1993ம் வருடம் தொண்டமானாறு சந்நிதி கோவிலில் நடைபெற்ற பருத்தித்துறை மாவட்ட சாரணர் பாசறையில் பங்குபற்றி 40 அடி உயரமான கோபுரம் ஒன்றினைக் கட்டி முடித்தமைக்காக எமது குழுவிற்குப் பாராட்டுக் கிடைக்கப் பெற்றது. நிலைக்காட்சியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் நிலைக்காட்சிக்கான முழுப்புள்ளிகளும் கிடைக்கப்பெற்றன.

15) கல்லூரித் தேவைகளுக்காக நிதி தேவைப்பட்ட போது வல்வைப் பொதுமக்களுடைய அனுசரணையுடன் களியாட்ட விழா ஒன்று 1959ம் வருடம் கல்லூரி மைதானத்தில் நடாத்தப்பட்டது. இக்களியாட்ட விழாவின் போது கல்லூரிச் சாரணர்களும் தங்களது சாதனைகளைச் செய்து காட்டினார்கள். அதில் திரு.சி.கதிர்காமத்தம்பி, திரு.ஏ.சிவானந்தம் ஆகிய இருவரும் நிலத்தின் அடியில் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக தங்கி இருந்து சாதனை புரிந்ததும் ஒன்றாகும்.

16) பிரதம சாரண ஆணையாளர் ஈ.டபிள்யூ.கன்னங்கரா அவர்கள் 1964ம் வருடம் (28.05.64) கல்லூரிக்கு விஜயம் செய்த போது எமது கல்லூரிச் சாரணர் குழுவை இலங்கைத் தீவினிலே தாம் பார்த்தவற்றுள் முதற்தரமான குழுவென்றும், இதுவரை தான் பார்த்தவற்றுள் திறமானதொரு சாரணர் அறையைக் கொண்டிருப்பது எமது கல்லூரியின் சாரணர் அறையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

17) இராணிச்சாரணர் கொடியினை யாழ் மாவட்டத்தில் முதன்முதலாகப் பெற்றுக்கொண்ட பெருமையும் இலங்கையிலேயே தொடர்ந்து மூன்று தடவைகளாகச் சிறந்த குழு என்ற பெருமையும் சிதம்பரா சாரணர் குழுவிற்கே உண்டு.

விளையாட்டுத்துறை

சிதம்பராக்கல்லூரி தனது வரலாற்றில் பல துறைகளிலும் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. இவ்வாறே விளையாட்டுத் துறையிலும் வியத்தகு சிறந்த சாதனைகளை நிலை நாட்டியுள்ளது. முன்னைய காலங்களில் இக்கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வீரர்களாகத் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பாக கரப்பந்தாட்டத்தில் தேசிய தரத்தை அடைந்தமையும் கல்லூரி வரலாற்றில் மறக்கமுடியாத சாதனைகளாகும். தரமான, சொந்தமான விளையாட்டு மைதானம், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் (மெய்வல்லுநர் போட்டி, கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம்) நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் எமது கல்லூரி மாணவர்கள் புரிந்துள்ள சாதனைகள் சிலவற்றை இங்கு குறிப்பிடவேண்டும்.

அ) கரப்பந்தாட்டம்

1) 1948 ம் வருடம் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் எமது கல்லூரி வீரர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் (Runners up) பெற்றுக் கொண்டதை முதலில் குறிப்பிட வேண்டும்.

2) 1951 ம் வருடம் எமது கல்லூரி வீரர்கள் அகில இலங்கை ரீதியில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கு கொண்டு முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது அடுத்துக் குறிப்பிட வேண்டும். இந்தப் போட்டியில் திருவாளர்கள் எஸ்.ஏ.துரைசிங்கம்(அணித்தலைவர்) நாதன் என்று அழைக்கப்படும் சீ.பத்மநாதன், வீ.சபாபதிப்பிள்ளை, விஜயன் என அழைக்கப்படும் ஆர்.சோமசுந்தரம், எஸ்.கணபதிப்பிள்ளை, வெ.பொன்னம்பலம் ஆகியோர் திறமையாக விளையாடி எமது கல்லூரிக்குப் புகழை ஈட்டித் தந்துள்ளார்கள். இவர்கள் இந்த வெற்றியை பெற்றுத் தந்தமைக்கு ஆசிரியர்களான திரு.பொ.பாலசுப்பிரமணியம், திரு.எஸ்.ஆர்.அரியரெத்தினம் ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக இருந்து உதவி புரிந்துள்ளார்கள். மேற்படி கரப்பந்தாட்டப்போட்டியில் எமது கல்லூரி வீரர்கள் ஹன்வெல்ல சென்.ஜோன்ஸ் பொஸ்கோ கல்லூரிக்கு எதிராக விளையாடி வெற்றியீட்டினார்கள். இக்கல்லூரி மாணவர்கள் பிறிதொரு தடவை வல்வைக்கு விஜயம் செய்து மீண்டும் எமது கல்லூரி குழுவினருடன் விளையாடிய மூன்று போட்டிகளில் எமது கல்லூரி இரண்டில் வெற்றியீட்டியது. எமது கல்லூரியின் இதே குழுவினர் கொழும்புத் திட்டப் பொருட்காட்சியின் போதும் ஆறு குழுக்களுக்கெதிராக விளையாடிய போட்டிகளில் பலப்பிட்டிய, கம்பஹா, மீரிகம, துடல்ல ஆகிய குழுக்களை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

3) 1955ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் பங்கு கொண்டு வெற்றியீட்டினார்கள்.

4) 1959ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றி பங்குபற்றிய ஐந்து போட்டிகளிலும் வெற்றியீட்டி சுழல் கோப்பையை சுவீகரித்துக் கொண்டமையும் நாம் பெருமைப்படக்கூடியதொன்றாகும். அதே நேரம் இந்தப் போட்டிகள் உரிய வேளையில் முடிவுறாது போனமையினால் எமது கல்லூரி அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தது.

5) மேற்படி சங்கத்தினால் 1961-1966 ம் வருட காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றியீட்டியதுடன் 1964-1966 ம் வருட காலப்பகுதிகளில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றியீட்டியது.

6) 1966ம் வருடம் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் எமது கல்லூரி அரை இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டு துரதிஷ்டவசமாக வெற்றியீட்டும் வாய்ப்பை இழந்தது. களுத்துறையில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் 16க்குப் 14, 15க்குப் 13 என்ற புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெறும் வாய்ப்பை எமது கல்லூரி இழந்தது.

7) வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் 1967ம் வருடம் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் வெற்றியீட்டியதுடன், கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிலும் கலந்து கொண்டது.

8) 1968ம் வருடம் கல்வியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கரப்பந்தாட்டப்போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்று 'நவீனவிக்னானி' கேடயத்தையும் எமது கல்லூரிக் குழுவினர் சுவீகரித்துக் கொண்டார்கள்.

9) கரப்பந்தாட்டப் போட்டியில் சிலகாலம் எமது குழுவினர் பிரகாசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த போதும் முன்பு இருந்த நிலையை மீண்டும் நிலைநாட்டும் முகமாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தும் கூட இருப்பவர்களைக் கொண்டு பயிற்றுவித்து கோட்ட மட்டப் போட்டிகளில் வெற்றியீட்டியதுடன் மட்டுமல்லாமல் வலய மட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டதையும் குறிப்பிட வேண்டும்.

ஆ) உதைபந்தாட்டம்

1) 1956ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் எமது கல்லூரி (1st ELEVEN) முதற் பிரிவினர் கலந்து கொண்டு வெற்றியீட்டியதுடன் யாழ் உதைபந்நதாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டியிலும் பங்குபற்றும் தகுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

2) 1957ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால்; நடாத்தப்பட்ட போட்டியில் கல்லூரியின (3rd ELEVEN) மூன்றாம் பிரிவினர் பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார்கள்.

3) 1959ம் வருடம் யாழ் உதைபந்தாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டியில் கல்லூரியின் (1st ELEVEN) முதற் பிரிவினர் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடிக்கொண்டார்கள்.

4) 1961ம் வருடம் யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் கல்லூரியின் (1st ELEVEN) முதற் பிரிவு பங்கு கொண்டு வெற்றியீட்டியது.

5) எமது கல்லூரி உதைபந்தாட்டக் குழுவில் கோல் காப்பாளராக இருந்த திரு.ஏ.ஆர். இரத்தினசிங்கம் அவர்கள் 1965 ம் வருட காலப்பகுதிகளில் யாழ்மாவட்ட உதைபந்தாட்டக் குழுவிற்கு தொடர்ச்சியாக மூன்று வருடம் கோல் காப்பாளராக இருந்ததையும் குறிப்பிடுவதில் கல்லூரி பெருமையடைகிறது.

6) 1967 ஆம் வருடம் யாழ் உதைபந்தாட்டச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டியில் கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவினர் பங்கு கொண்டு வெற்றியீட்டினார்கள்.

7) 1995ஆம் வருடம் மாவட்ட மட்டப்போட்டியில் கல்லூரியின் 1ம் அணியினர் பங்குபற்றி விளையாடி வரும் சந்தர்ப்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக போட்டிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையினால் வெற்றியீட்டும் வாய்ப்பினை கல்லூரி இழந்தது.

8) எமது கல்லூரி மாணவர்கள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை புரிந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். லண்டனில் இயங்கி வரும் யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கிடையே 1995ஆம் வருடம் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் சிதம்பராவின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டார்கள்.

இ) மெய்வல்லுநர் போட்டிகள்.

1) 1949ம் வருடம் யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் கல்லூரி மாணவன் எஸ்.ஏ.துரைசிங்கம் 100 யார், 200 யார் ஓட்டப் போட்டிகளில் பங்கு கொண்டு இரண்டிலுமே முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

2) 1955ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் எமது கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டு பல வெற்றிக் கிண்ணங்களைச் சுவீகரித்துக் கொண்டார்கள். இ.துரைலிங்கம் அவர்கள் தத்திமிதித்துப் பாய்தல், குண்டெறிதல்,பரிவட்டம் எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில் பங்குபற்றி மூன்றிலுமே முதலாமிடத்தைப் பெற்று வெற்றி வீரர் (CHAMPION) ஆனார். யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்குபற்றி, தத்திமிதித்துப் பாய்தலில் இரண்டாம் இடத்தையும், குண்டெறிதல்,பரிவட்டம் எறிதல் ஆகிய இரண்டிலும் 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டார். இதே வருடம் அ.வி.அருணாசலம் அவர்களும் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் நீளம் பாய்தல், ஒரு மைல், அரை மைல் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொண்டு நீளம் பாய்தலிலும், ஒரு மைல், ஓட்டப்போட்டியிலும் 1ம் இடத்தையும், அரை மைல் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார். யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் கலந்து கொண்டு நீளம் பாய்தல், அரை மைல் ஓட்டம் ஆகியவற்றில் இரண்டாமிடத்தையும் பெற்று அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

3) I) 1963 ஆம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்டோர் பிரிவில் திரு.கே.எஸ்.சிவனருள்சுந்தரம் பங்குகொண்டு 100 யார் ஓட்டப் போட்டியில் 12.7 செக்கனில் ஓடி முடித்து புதிய சாதனையை நிலைநாட்டினார். அதே வருடம் யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்குகொண்டு உயரம் பாய்தலில் 4அடி 9 அங்குலம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.

II) 1964 ம்வருடம் அகில இலங்கை ரீதியில் கொழும்பில் நடைபெற்ற போட்டியி;ல் திரு.கே.எஸ்.சிவனருள்சுந்தரம் பங்குகொண்டு உயரம் பாய்தலில் இரண்டாமிடம் பெற்றுக் கொண்டதையும் குறிப்பிட வேண்டும்.

III) 1965 ஆம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் திரு.கே.எஸ்.சிவனருள்சுந்தரம் கலந்து கொண்டு 200 மீற்றர், 100 மீற்றர் ஓட்டப்பந்தயங்களிலும், நீளம் பாய்தலிலும், முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இப்பந்தயங்களில் புதிய சாதனையையும் நிலைநாட்டியுள்ளார். இதே வருடம் யாழ் விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் மேற்படி போட்டிகளில் பங்குபற்றி முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தினை 25.3 செக்கனில் ஓடி முடித்து புதிய சாதனையையும் நிலைநாட்டினார். அதே வருடம் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கு கொண்டு நீளம் பாய்தலில் 1ம் இடத்தையும், 200 மீற்றர் ஓட்டத்தில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டார்.

4) திரு.கே. பாலசிங்கம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் 1963ம் வருடம் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கு கொண்டு ஒரு மைல், அரை மைல் ஓட்டப்போட்டிகளில் 2ம் இடத்தைப் பெற்று அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றினார்.

5) திரு.ப.விஜயராசா 1971ம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு 100 யார், 200 யார் ஓட்டப் போட்டிகளில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், யாழ் பாடசாலைகள் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்குகொண்டு மேற்படி இரண்டு ஓட்டங்களிலும் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றினார்.

6) திரு.கி.நிரஞ்சன் 1971ம் வருடம் யாழ் பாடசாலை ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு பரிவட்டம் எறிதலில் 1ம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

7) திரு.ஏ.அருள்பவான் 1970ஆம் வருடம் வடமராட்சி ஆசிரியர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் ஒரு மைல், அரை மைல் ஓட்டப்போட்டிகளில் பங்கு கொண்டு 1ஆம் இடத்தையும், என்.ரீ. நாகேஸ்வரன் 100 யார், 200 யார் ஓட்டப் போட்டியில் 1ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
8) 1992 ஆம் வருடம் நடாத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான போட்டியில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தத்திமிதித்துப் பாய்தலில் செல்வன்.இ.சாந்தரூபன் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

9) 1995ஆம் வருடம் நடாத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் செல்வன் த.சதீஸ்குமார் 500 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

விளையாட்டுத் துறையில் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு நில்லாமல் தாம் கல்லூரியை விட்டு விலகிய பின்னரும் மாணவர்களுக்குப் பயிற்சியை வழங்கியும், வெள்ளிக் கேடயங்களையும், வெள்ளிக் கோப்பைகளையும் வழங்கியுமுள்ளார்கள். பயிற்சியை வழங்கியவர்களில் சிறந்த விளையாட்டு வீரராக இருந்து அகால மரணமான திரு.அ.வி.அருணாசலம் அவர்களும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.